சக்தி விகடன் நாளிதழில் குருசாமி அரவிந்த் ஸுப்ரமண்யம் பகிர்ந்த தகவல்
மற்ற எல்லாவிரதங்களில் இருந்தும் முற்றிலும் மாறுபட்ட விரதம் ஐயப்ப விரதம். ஒவ்வொரு மாதமும் சஷ்டி, ஏகாதசி, பிரதோஷ விரதங்கள் எல்லாம் ஓரிரு நாள்கள் மேற்கொள்ளும் விரதங்களாக இருக்கும். கந்த சஷ்டி விரதம் 6 நாள்களும் கேதார கௌரி விரதம் 21 நாள்களும் நீடிப்பவை. ஆனால் ஐயப்பவிரதம் ஒரு மண்டல காலம் நீடிப்பது. எனவே, இதற்கான நியமங்களும் அதிகம். பரபரப்பான இந்தக் காலகட்டத்தில் இவ்வளவு அதிகமான நாள்களைக் கொண்ட விரதத்தை மேற்கொள்வதில் ஏற்படும் சிரமங்களும் அதுகுறித்த சந்தேகங்களும் அதிகமாக இருப்பது இயல்பானதே. வாசகர்கள் அத்தகைய சந்தேகங்களை ‘குருசாமியைக் கேளுங்கள்’ பகுதியில் கேட்குமாறு அறிவித்திருந்தோம். அவற்றுகான பதில்களை மூத்த குருசாமி அரவிந்த் ஸுப்ரமண்யம் நமக்கு வழங்கிவருகிறார். வாசகர்களின் கேள்விகளில் சில மீண்டும் மீண்டும் வருவன. அப்படி ஒரு கேள்விதான், ‘முதல்முறை மாலையிடும் கன்னிசாமிகள், கட்டாயம் வீட்டில் கன்னிபூஜை செய்து அன்னதானம் செய்யவேண்டுமா?’ என்பது.
மாலையிட்டிருக்கும் பக்தரின் பொருளாதார நிலைமையைக் கருத்தில் கொள்ளாமல் சில குருசாமிகள் இதை வலியுறுத்துகிறார்கள். இதனால் சாமிமார்களும் கடன்வாங்கி இந்த பூஜையையும் அன்னதானத்தையும் செய்கின்றனர். எனவே பல சாமிமார்களும் கேட்டிருந்த இந்தக் கேள்வியை குருசாமியின் முன்வைத்தோம்.
“பொதுவாக சபரிமலை யாத்திரை பலவிதமான நுட்பங்களையும் தத்துவங்களையும் கொண்ட விஷயமாக இருக்கிறது. எப்படியெல்லாம் இதைக் கடைப்பிடிக்கவேண்டும் என்று பல குருமார்கள் நியதிகளை வகுத்துத் தந்திருக்கிறார்கள். இந்தக் கன்னிபூஜையின் முக்கியமான விஷயம், முக்கியமான தத்துவமான அன்னதானத் தத்துவத்தைக் கொண்டது. மலைக்கு மாலையிட்டுக்கொண்டிருக்கும் ஒரு பக்தன் தன்னோடு மாலையிட்டுவரும் சாமிமார்களுக்கோ அல்லது வறியவர்களுக்கோ அன்னதானம் செய்யவேண்டும். ஐயப்பனுக்கே அன்னதான பிரபு என்று பெயர். அன்னதானம் செய்வதன் மூலம் ஐயப்பன் மிகவும் சந்தோஷமடைகிறார். அவர் சந்தோஷமடைகிறபோது அவரது அருள் பக்தர்களுக்குக் கிடைக்கிறது. இந்தக் காரணத்துக்காகத்தான் கட்டாயம் அன்னதானம் செய்ய வேண்டும் என்கிற ஒரு விதியைக் கொண்டுவந்து வைத்தார்கள். வெறும் அன்னதானம் என்று செய்யாமல் ஐயப்பனுக்கு பூஜைகள் செய்து அந்த ஐயப்பனுடைய பெயரால் அனைவருக்கும் அன்னதானம் வழங்கும் வழிமுறைகள் உருவாயின.
பொதுவாக மாலையிட்டவர்கள் தினமும் இருவேளையும் பூஜை செய்யவேண்டியது அவசியம். ஆனால், இந்த கன்னிபூஜையைப் பொறுத்தவரை இப்படித்தான் செய்யவேண்டும், இத்தனை பேருக்குக் கட்டாயம் அன்னதானம் தரவேண்டும் என்று எதுவும் இல்லை. சொல்லப்போனால் இப்படிச் சொல்லவும் முடியாது. நம் சக்திக்கு உட்பட்டு என்ன முடியுமோ அதைச் செய்யுங்கள். பகவத் கீதையில் கிருஷ்ணண் சொல்வதுபோல, பத்ரம், புஸ்பம், பழம், தோயம் அதாவது ஓர் இலை, ஒரு பூ, ஒரு பழம், ஒரு துளி நீர், உன்னால் முடியும் என்றால் அதைக் கொடுத்தால் போதுமானது. நம் சக்தி உட்பட்டதைக்கொடுப்பதென்பது நமக்கு மட்டுமல்ல நம் குடும்பத்துக்கும் நன்மையைக் கொண்டுவந்துகொடுக்கக் கூடியது. அதனால்தான் சாமிமார்கள் இங்கு மட்டுமல்ல, சபரிமலை செல்லும் வழிகளிலும் இத்தகைய அன்னதானத்தைப் பிரதானமாகச் செய்கிறார்கள். அதற்காகக் கடன்வாங்கி கஷ்டப்பட்டு செய்ய வேண்டியதே இல்லை. அதுதான் தேவையில்லை என்கிறேன். கஷ்டப்பட்டு கன்னிபூஜை செய்யத் தேவையில்லை என்பதே என் கருத்து.
இந்த இடத்தில் உண்மையாக நடந்த ஒரு சம்பவத்தைச் சொல்ல ஆசைப்படுகிறேன். எனக்கு அறிமுகமான நல்ல குருசாமி. அவர் பெயரே சாஸ்தா சாமி என்பது. அவரிடம் வந்த ஒரு பக்தர் “வீட்டில் கன்னிபூஜை செய்ய வேண்டும். நீங்கள் வந்து செய்துகொடுக்க முடியுமா?” என்று கேட்டார். “அதற்கு என்னென்ன பொருள்கள் வாங்க வேண்டும் சொல்லுங்கள்” என்றும் கேட்டார். குருசாமியில் தேவையான பொருள்களைச் சொன்னார். அவற்றின் பட்டியலைப் பார்த்த பக்தர் ஒருகணம் திகைத்து நின்றார். உடனே குருசாமி, “என்ன யார்கிட்ட போய் கடன் வாங்கலாம்னு யோசிக்கிறியா?” என்று கேட்கவும் அந்த பக்தர் அதிர்ச்சியடைந்தார். இனி மறைப்பதில் பயனில்லை என்று, “இது நான் எதிர்பார்த்ததை விடக் கூட இருக்கிறது” என்று உண்மையைச் சொல்லிவிட்டார்.
“உன்னிடம் எவ்வளவு பணம் இருக்கிறது?” என்று கேட்டார். அதற்கு அந்த பக்தரும், “நூறு ரூபாய் உள்ளது” என்றார். உடனே, “அதில் கால்கிலோ உதிரி புஷ்பம், ஐயப்பனுக்கு ஒரு பூச்சரம், வெல்லம், ஒரு டஜன் வாழைப்பழம் ஆகியன வாங்கிக்கொள்” என்று சொல்லி வீட்டுக்குப் போனார்கள். வாங்கிவந்த பூச்சரத்தை ஐயப்பனுக்கு சாத்தி, சந்தன குங்குமம் இட்டு புஷ்பங்களால் அர்ச்சனை செய்து பழத்தையும், வெல்லத்தில் பானகம் கரைத்து இரண்டையும் நிவேதனம் செய்து பூஜையை முடித்தார். விஸ்தாரமான பூஜை. பூஜையில் எந்தக் குறையும் இல்லை. பூஜை முடிந்ததும் உடன் வந்த சாமிமார்களுக்கு பானகத்தைப் பகிர்ந்தளித்து வாழைப்பழத்தை சாப்பிடக் கொடுத்தார் குருசாமி. அவரும் அதை உண்டார். பின்பு, “அப்பா உன் கன்னிபூஜை நல்லபடியா முடிந்தது. உன் அன்னதானமும் முடிந்தது. ஐயப்பமார்கள் பிரசாதத்தை சாப்பிட்டாச்சு. ஐயப்பனின் அனுகிரகம் உனக்குப் பூரணமாகக் கிடைக்கட்டும். ஒரே ஒரு ரூபாய் மட்டும் எனக்குக் கொடு” என்று கேட்டு வாங்கிக்கொண்டார்.
என்னைக் கேட்டால் இதுதான் உத்தமமான கன்னிபூஜை. இதுவே நல்ல குருநாதரின் லட்சணமும்கூட. நமக்கு செலவு செய்ய முடிந்தும் கஞ்சத்தனமாகச் செலவு செய்யாமல் இருந்தால் அது தவறு. முடியாமல் இருக்கும்நிலையில் கடன் வாங்கிக் கஷ்டப்பட்டு செலவு செய்யச் சொல்லி சுவாமி சொல்லவில்லை. எனவே, கன்னிபூஜை என்பது கட்டாயம் செய்ய வேண்டும். அதேவேளையில் நம் சக்திக்கு உட்பட்டு என்ன முடியுமோ அதைச் செய்யவேண்டும். சரணம் ஐயப்பா!” என்றார்.
அதேபோல ஆனந்த குமார் என்ற வாசகர், `மாலைபோட்ட பின்பு வீடுமாற்றலாமா?’ என்ற கேள்வியை முன்வைத்திருந்தார்.
“வீடு மாத்துறதுக்கும் சபரிமலைக்கு மாலை போட்டுக்கொள்வதற்கும் எந்தச் சம்பந்தமும் கிடையாது. பொதுவா மனைவி கருவுற்றிருக்கும்போது வீடுமாற்றக்கூடாது என்கிற நம்பிக்கைதான் உண்டு. இதனால் சபரிமலையாத்திரைக்கு எந்தப் பங்கமும் ஏற்படாது. எனவே தாராளமாக வீடுமாற்றலாம்.
எதனால் இத்தகைய சந்தேகங்கள் வருகிறது என்றால், வீடுமாற்றினால் சுவாமியை நகர்த்த வேண்டிவரும். பூஜைகளுக்கு இடர்பாடு ஏற்படும் என்கிற காரணத்தால் இப்படிச் சொல்லலாம். நாம் நம் விரதத்துக்கு எந்தக் குறைவும் இல்லாமல் நம் பூஜை தடைபடாமல் பார்த்துக்கொண்டால் வீடுமாற்றுவதில் தவறில்லை” என்று சொன்னார்.
– சரணம் ஐயப்பா –